கைகோர்ப்பு வணிகர்களுடன் கட்சிகள், தொழில் அமைப்புகள் ----------------------------------------- மாநகரில் நாளை முழு கடையடைப்பு போராட்டம்
திருப்பூர்; சொத்து வரி உயர்வு, வாடகை கட்டடங்களுக்கு ஜி.எஸ்.டி., ஆகியவற்றைத் திரும்பப்பெற வலியுறுத்தி, திருப்பூரில் நாளை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.திருப்பூர் மாநகராட்சியில், சொத்து வரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு, வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதித்துள்ளது. இவற்றுக்கெதிராக திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை சார்பில், 8ம் தேதி முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாளை (18ம் தேதி), முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.அ.தி.மு.க.,வினர், நேற்று துவங்கி நாளை வரை, தங்கள் வீடு, கடை, தொழிற்சாலைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்கள் போராட்டத்துக்கு, குறு, சிறு தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்பட பெரும்பாலான கட்சிகள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.தொழில் அமைப்புகள் ஆதரவுதிருப்பூர் கோன் அட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. திருப்பூர் தையல் நுால் வியாபாரிகள் சங்கத்தினர், நாளை, தங்கள் சங்க உறுப்பினர்களின் 294 கடைகளும் மூடப்படுமென அறிவித்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில்,''வணிகர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். 18ம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். தொழிலையும், வணிக நிறுவனங்களையும் பாதுகாக்க, அனைத்து தரப்பினரும், போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும்,'' என்றார். கொங்கு நாடு விவசாயிகள் கட்சியும் கடையடைப்புக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.பல்லடத்திலும் கடையடைப்புபல்லடம் வியாபாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''நாளை பல்லடம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட மாட்டோம்,'' என்றார்.
கோரிக்கைகள் பரிசீலனை
வணிகர்கள் நம்பிக்கைமுழு கடையடைப்பு போராட்டத்தில், அனைத்து வணிக அமைப்புகளும் பங்கேற்கின்றன. பாதிப்பை அரசுக்கு உணர்த்தும் விதமாக, முழுமையாக கடைகள் அமைக்கப்படும். கார்ப்பரேட் நிறுவன வணிக வளாகங்களையும், அன்று மூட வேண்டுமென நேரில் சென்று வலியுறுத்தி வருகிறோம். போராட்டம் மூலம், திருப்பூர் வணிகர் மற்றும் தொழில்துறையினரின் பாதிப்புகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான், கோரிக்கையை அரசுகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.துரைசாமி, தலைவர், திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவை.
ஹிந்து முன்னணி ஆதரவு
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கடந்த ஆண்டு திருப்பூர் மாநகராட்சி மிக அதிகமாக சொத்து வரியை உயர்த்தியது. தற்போது மீண்டும் அதிகமான சொத்து வரி உயர்த்தி, மக்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. வரலாறு காணாத அளவு மின் கட்டண உயர்வால், சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, மாநில அமைச்சர்கள் வந்து மின் கட்டணத்தை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தனர். வெற்றி பெற்றவுடன் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. தொழில் நடத்துவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சியின் சொத்து வரி, குப்பை வரி போன்றவற்றினாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தொழில் அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் சார்பில், வரும், 18ம் தேதி (நாளை) நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு ஹிந்து முன்னணி முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.