உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்சியினர், விவசாய அமைப்பினர் மலரஞ்சலி பெருமாநல்லுார் நினைவு ஸ்துாபியில் குவிந்தனர்

கட்சியினர், விவசாய அமைப்பினர் மலரஞ்சலி பெருமாநல்லுார் நினைவு ஸ்துாபியில் குவிந்தனர்

பெருமாநல்லுார்: விவசாய மின் இணைப்புக்கு, ஒரு பைசா மின் கட்டண உயர்வை எதிர்த்து, 1970ம் ஆண்டு தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருப்பூர் அடுத்த பெருமாநல்லுாரில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.துப்பாக்கி சூட்டில் காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி கவுண்டர், தொரவலுார் ஊராட்சி, வாரணவாசிபாளையத்தை சேர்ந்த மாரப்ப கவுண்டர், மேற்குபதி ஊராட்சி, ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்த ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் பலியாயினர். அவர்களது நினைவாக பெருமாநல்லுார் - கணக்கம்பாளையம் பிரிவில் நினைவு ஸ்துாபி அமைக்கப்பட்டுள்ளது.அதில், துப்பாக்கி சூட்டியில் பலியானவர்களின் 55வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்து. பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் குமார ரவிக்குமார், அகில இந்திய விவசாய சங்க துணை தலைவர் கருப்பசாமி, இந்து சமத்துவ மக்கள் இயக்க நிர்வாகி பூபாலு, மா.கம்யூ., நிர்வாகி அப்புசாமி, இ.கம்யூ நிர்வாகி மகேந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம்;நாம் தமிழர் கட்சி நிர்வாகி மனோகர், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தொரவலுார் சம்பத்குமார், கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் தங்கள் நிர்வாகிகளுடன் சென்று நினைவு ஸ்துாபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நல உதவிகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ