மருத்துவர் பற்றாக்குறை நோயாளிகள் அவதி
பல்லடம்,; பல்லடம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பற்றாக்குறை உள்ளதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. தினசரி, 700க்கும் அதிகமான புற நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். விபத்து அவசர சிகிச்சை, கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான சிகிச்சை என, எண்ணற்ற மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில், அடிப்படைத்தேவைகள் பற்றாக்குறை இருந்து கொண்டே உள்ளன. அவ்வகையில், மருத்துவர் பற்றாக்குறையும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.கண், காது, மூக்கு, எலும்பு, நரம்பு, இருதயம் உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு, அந்த துறை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் தான் உரிய தீர்வு காண முடியும். ஆனால், சிறப்பு மருத்துவர்கள் பெரும்பாலும் இங்கு இருப்பதில்லை. மொத்தம், 16 மருத்துவர்கள் இங்கு உள்ளனர். ஆனால், கடந்த சில தினங்களாக, சிறப்பு மருத்துவர்கள் பலர் வெவ்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பணியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக, பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவர்கள் இன்றி, கூடுதல் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டி உள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.---பல்லடம் அரசு மருத்துவமனை
'தேவைகளை கேட்டுள்ளோம்'
பல்லமட் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமியிடம் கேட்டதற்கு, 'சிறப்பு மருத்துவர்கள் கூடுதல் பணிக்காக அவ்வப்போது வேறு இடங்களுக்கு நியமிக்கப்படுவதும், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து, சிறப்பு மருத்துவர்கள் இங்கு பணிக்கு வருவதும் வாடிக்கை. அவ்வாறு, இங்குள்ள மருத்துவர்கள் பலர், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். மேலும், சிலர் விடுப்பில் உள்ளதால், மருத்துவர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கூடுதல் பணிக்குச் சென்ற மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு வந்ததும், வழக்கம்போல் பணிகள் நடைபெறும். மேலும், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதி, மருத்துவர்கள் உள்ளிட்ட தேவைகளை கேட்டுள்ளோம் என்றார்.