ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழ்; தபால்துறை மூலம் விழிப்புணர்வு
திருப்பூர்,: ஓய்வூதியர் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் நவ., மாதம் முழுதும் தபால்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மத்திய, மாநில அரசுப்பணி புரிந்து ஓய்வு பெற்றோர், ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக சான்றிதழை நேரடியாக சென்று சமர்ப்பிக்க முடியாமல், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். தபால்துறையின் 'போஸ்ட்பேமென்ட்ஸ்' திட்டம் மூலம், வீடுகளுக்கே சென்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலானோர் சான்றிதழை சமர்ப்பிப்பதில் தாமதம் செய்கின்றனர்.வரும் நவ., 1 முதல், 30ம் தேதி வரை ஒரு மாதம், விழிப்புணர்வு ஏற்படுத்தி, சான்றிதழை எளிதில் பெறுவதற்கான ஏற்பாடுகளை, ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை மற்றும் தபால்துறை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு தபால் கோட்டத்திலும் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு, சான்றிதழ் எளிதாக கிடைக்க பெற செய்வதுடன், தபால் அலுவலகத்துக்கு வந்து சான்றிதழ் பெறுவோரை ஊக்குவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.