குடிக்க தண்ணீர் வந்து மாசமாச்சு; போராட தயாராகும் மக்கள்
உடுமலை; கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்காததால், விருகல்பட்டி ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பழையூர் மற்றும் விருகல்பட்டிபுதுார் கிராமங்கள். திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக இரு கிராமங்களுக்கும், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கவில்லை. உள்ளூர் நீராதாரமான போர்வெல்லில் இருந்தும், தண்ணீர் குடியிருப்புகளுக்கு வழங்கவில்லை. இதனால், கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் இரு கிராம மக்களும் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழையூர் கிராமத்திலுள்ள மேல்நிலைத்தொட்டியும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நிர்வாகங்களின் அலட்சிய போக்கைக்கண்டித்து, இரு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.