உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காவிலிபாளையம் குளத்தில் நீர் விளையாட்டு நடத்த அனுமதி

காவிலிபாளையம் குளத்தில் நீர் விளையாட்டு நடத்த அனுமதி

திருப்பூர்: திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் எல்லையில், 480 ஏக்கரில் காவிலிபாளையம் குளம் உள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியின் எல்லையாக உள்ள இக்குளம், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், காவிலிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.கோவை மற்றும் அவிநாசி பகுதிகளின் வழியாக வரும் நீர்நிலைகளில் வழிந்தோடி வரும் நீர், இக்குளத்தை நிரப்புகிறது. அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழும், தற்போது இக்குளத்தில் நீர் செறிவூட்டப்பட்டு வருகிறது; அதன் விளைவாக, குளம் நிரம்பி ததும்புகிறது.'காவிலிபாளையம் படகு சங்க தலைவர் டாக்டர் பிரபு, செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், 'நீர் விளையாட்டுகளை நடத்தும் அமைப்பான, 'கனோயிங் மற்றும் கயாக்கிங்' சார்பில், இக்குளத்தில் படகு போட்டி நடத்த ஊர் மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழக ஒலிம்பிக் கமிட்டி மற்றும் தமிழ்நாடு கனோயிங் மற்றும் கயாக்கிங் அமைப்பினர் இதற்கு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையை, ஈரோடு மாவட்ட படகு மையம் மற்றும் நீர் விளையாட்டு அமைப்பினரிடம் முன்வைத்தனர்.மாவட்ட அமைப்பின் தலைவர் மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள், 'இக்கோரிக்கையை பரிசீலித்து, பரிந்துரைக்க வேண்டும்' என, தமிழ்நாடு கனோயிங் மற்றும் கயாக்கிங் அமைப்புக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதனடிப்படையில் அமைப்பின் பொது செயலாளர் மெய்யப்பன் மற்றும் வல்லுனர் குழுவினர், கடந்த, 16ம் தேதி, குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். படகில் பயணித்து காற்று வீசும் திசை, நீர்வரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கை அடிப்படையில், காவிலிபாளையம் குளத்தில் நீர் விளையாட்டு நடத்த மாநில அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை