உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனுக்களுக்கு மதிப்பு... பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

மனுக்களுக்கு மதிப்பு... பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

திருப்பூர்; நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளை சுட்டிக்காட்டி, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு பதிலளிக்கவேண்டியது துறை சார்ந்த அரசு அலுவலர்களின் கடமை. திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் மனீஷ் நாரணவரே, நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

அடிக்கடி விபத்து

கொடுவாய் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்: திருப்பூர் தெற்கு தாலுகா, அவிநாசிபாளையம் முதல் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள மெட்டூர் வரையிலான இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. நான்குவழிச்சாலையில், ரோடு சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி உயிர்பலி விபத்துகள் நடக்கின்றன. இதையடுத்து, மெட்டூர் முதல் கொடுவாய் அருகே, என்.காஞ்சிபுரம் வரை, 35 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. கொடுவாய் நகரில், பொள்ளாச்சி ரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை, காட்டூர் ரோடு சந்திப்பு, மின்மயான பகுதிகளில், ரோடு சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. அதிவேகமாக செல்லும்வாகனங்களால், தினமும் விபத்துகள் நடக்கின்றன. அப்பகுதிகளில் உடனடியாக வேகத்தடை அமைக்கவேண்டும்.

கோவிலுக்கு இடம்

இடுவாய், திருமலை நகர் பகுதி மக்கள்: திருப்பூர் மாநகராட்சி, திருமலை நகரில், 75 குடும்பங்கள் வசித்துவருகிறோம். சுற்றுப்பகுதியில் அரை கிலோ மீட்டர் துாரத்துக்கு எந்த கோவிலும் இல்லை. மக்கள் ஒன்றுகூடி, திருமலை நகர் மூன்றாவது வீதியில், எவ்வித இடையூறுமின்றி விநாயகர் கோவில் அமைக்க விரும்பினோம்; ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எங்கள் பகுதி மக்களின் வழிபாட்டுக்கு கோவில் அமைப்பதற்காக, அரசு இடம் ஒதுக்கீடு செய்துதரவேண்டும்.

பட்டா வழங்குங்க...

தளவாய் பட்டணம் பொதுமக்கள்: தாராபுரம் தாலுகா, தளவாய்பட்டணத்தில், 7, பட்டியல் சமூக குடும்பத்தினருக்கு, 1.37 ஏக்கர் புன்செய் நிலம் வழங்கப்பட்டது. அதற்கான நில மதிப்பு தொகை முழுவதும் செலுத்தி, வருவாய் கிராம கணக்குகளில் எங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது; அந்த நிலத்தில் சாகுபடி செய்துவருகிறோம். கோர்ட் உத்தரவுப்படி, கடந்த 2022, டிசம்பரில், எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை, அளவீடு செய்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர், எங்களுக்கு வழங்கினார். எங்கள் நிலத்துக்கு எப்., பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராம கணக்குகளில், வழக்கு நிலுவையில் உள்ளது என்கிற பதிவையும் நீக்கம் செய்யவேண்டும்.

வழிபட இடையூறு

திருப்பூர், யாஷின்பாபு நகர் பகுதி மக்கள்: யாஷின்பாபு நகர் பகுதியில், 20 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். சிலர், எங்கள் மத வழிபாட்டுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திவருகின்றனர். சதுர்த்தி விழாவின்போது, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவிடாமல், போலீசாரை கொண்டு, தடுத்தனர். எங்கள் பகுதி மக்களின் சுதந்திரத்தை சீர்குலைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், எங்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து, போராட்டங்கள் நடத்தப்படும்.

அளக்கப்படாத இடம்

திருப்பூர் வடக்கு ஒன்றிய மா.கம்யூ.,வினர்: ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில்,122 பேருக்கு, கடந்த 1994ல் இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலம் அளந்து கொடுக்கவில்லை. 2024ல், பெருமாநல்லுாரில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதியில் வீடு கட்ட, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. சிலர், அந்த இடத்தை கோவில் நிலம் எனவும், அரசுத்துறை பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும் மனு அளித்தனர். அப்பகுதியில் எந்த மத வழிபாட்டு தலங்களும் இல்லை. பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து கொடுக்க தாமதம் ஏற்பட்டதால், நடைபயணம் நடத்தினோம். பேச்சுவார்த்தை நடத்திய டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், எடுக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள அந்த இடத்தில், எவ்வித ஆக்கிரமிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் தடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட அளவில், வாரந்தோறும் திங்களன்று கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்கவேண்டும் என்பது விதிமுறை. ஒவ்வொரு குறைகேட்பு கூட்டத்தின்போதும், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கையெழுத்திடுவதற்காக, வருகைப்பதிவேடு வைக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு குறைகேட்பு கூட்டத்திலும், வெவ்வேறு அரசுத்துறை சார்ந்த மொத்தம், 175 அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலர்கள், குறைகேட்பு கூட்டத்தில் முறையாக பங்கேற்பதில்லை. நேற்றைய குறைகேட்பு கூட்டத்திலும், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்காததால், இருக்கைகள் காலியாக கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை