சேமிப்பு பழக்கம் ஊக்குவிக்க மாணவர்களுக்கு உண்டியல்
திருப்பூர்; திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரம் துவக்கப்பள்ளியில், 'சிறு துளி, புது வெள்ளம்' என்ற தலைப்பில், மாணவ, மாணவியரிடையே சேமிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மோகன், தலைமை வகித்து, ''நடப்பு கல்வியாண்டில் அதிகம் சேமிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி ஆண்டு விழாவின் போது, 'சிறந்த சேமிப்பாளர்' என்ற விருது வழங்கப்படும். சேமிப்பு பழக்கம் என்பது, மிக முக்கியமானது; மாணவர்களின் இன்றைய சேமிப்பு, எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது; பாதுகாப்பானது'' என ஊக்குவித்து பேசினார். 'பள்ளியில் படிக்கும், 330 மாணவ, மாணவியரும் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்ற நோக்கில், 3,000 ரூபாய் மதிப்புள்ள உண்டியலை, திருப்பூரைச் சேர்ந்த ஞானவேல் அன்பளிப்பாக வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் என பலர் பங்கேற்றனர்.