குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
திருப்பூர்: திருப்பூர், ராயபுரம் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ெவளியேறும் குடிநீர் வாய்க்கால் போல் பாய்ந்து, சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகிறது. திருப்பூர் மாநகராட்சி, 36வது வார்டு ராயபுரத்தில், ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி வீதியில், ரோட்டோரம் பிரதான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியே ராயபுரம் மேல்நிலைத் தொட்டி மற்றும் கருவம்பாளையம் மேல்நிலைத்தொட்டிகளுக்கு குடிநீர் செல்கிறது. குழாயில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. பிரதான குழாய் என்பதால், குடிநீர் அதிகளவு வெளியேறியது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலர் திவாகரன் கூறியதாவது: உடைந்த குழாய் 2வது குடிநீர் திட்டத்தில் அமைந்துள்ள பிரதான குழாய். இதில் ஏற்பட்ட உடைப்பு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பிரதான குழாய் என்பதால், குடிநீர் சப்ளை முழுமையாக நிறுத்தி மட்டுமே பணி செய்ய முடியும். குடிநீர் சப்ளையை நிறுத்தினால், 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் முழுமையாக கிடைக்காது. இரண்டாவது குடிநீர் திட்டத்தில் மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே சப்ளை நிறுத்தப்படும். தீபாவளி என்பதால் மேற்கொள்ளவில்லை. நாளை குடிநீர் சப்ளை நிறுத்தி, ஊழியர்களை வைத்து சீரமைப்பு பணி உடனே மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.