வேட்டுவபாளையம் குளத்தில் பனை விதைகள் நடவு
திருப்பூர்; மங்கலம் பகுதியில் இயங்கி வரும், 'மரபோடு உறவாடு' அமைப்பினர், மரக்கன்று நட்டு வளர்க்கும் பணியை செய்து வருகின்றனர். வேட்டுவபாளையம் குளக்கரையில், பனைவிதைகளை நேற்று நடவு செய்தனர். சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளுடன் வந்து குழுவினர் நேற்று, பனைவிதைகளை நட்டு வைத்தனர். இந்த அமைப்பினர் கூறுகையில்,'இதுவரை 2,000க்கும் அதிகமான பனைவிதைகளை, நீர்நிலைகளில் நட்டு வைத்துள்ளோம். நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும், செறிவூட்டலிலும், பனை மரங்கள் மிகவும் முக்கியம். பனைவிதை கிடைக்கும் போது, எடுத்துவந்து பத்திரப்படுத்தி வைத்து, வாராவாரம் நடவு செய்து வருகிறோம். பனைமரம் வளர்ப்பின் நன்மைகளை உணர வேண்டும் என்பதால், சிறுவர்களையும் உடன் அழைத்து வந்து நடுகிறோம்,' என்றனர்.