உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

லாட்டரி, கள் விற்ற இருவர் கைது

காங்கயம் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற் பனை தொடர்பாக காங்கயம் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். காங்கயம் திருப்பூர் ரோட்டில் லாட்டரி விற்ற, பாலு, 63 என்பவரை கைது செய்தனர். அதேபோல், சட்டவிரோதமாக தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி, விற்பனை செய்த கீரனுாரை சேர்ந்த துரைசாமி, 55 என்பவரை கைது செய்து, 14 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

ஆம்புலன்ஸ் மோதி 3 பேர் காயம்

காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் சந்தோஷ், 25, சுபாஷ், 27 மற்றும் விவேக், 22 என, மூன்று பேரும் காங்கயத்தில் இருந்து சென்னை செல்ல டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். பழையகோட்டை ரோட்டில் சென்ற போது, எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ், டூவீலர் மீது மோதியது. காயமடைந்த, மூன்று பேரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

தர்மபுரி மாவட்டம், மஞ்சநாயக்கன்பள்ளியை சேர்ந்தவர் வினோத், 26. இவர் தனது நண்பர்கள் சபரி சங்கர், கணேஷ் ஆகியோர் குண்டடத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். காருக்கு முன்னால் டூவீலரில், மூன்று பேர் வழிவிடாமல் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தனர். இதனால், ஹாரன் அடித்தனர். உடனே, டூவீலரை நடுரோட்டில் நிறுத்தி, தகராறு செய்து தாக்கினர். இதுதொடர்பாக, தனுஷ், 22, விகாஷ், 23 மற்றும் டேவிட் தங்கம், 23 என, மூன்று பேரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.

தீ விபத்தில் ஒருவர் பலி

திருப்பூர், அணைக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 57. இவரது மனைவி ராதா, 50. மகன் அசோக்குமார், 30. பழனிசாமி ஓவியராக பணியாற்றுகிறார். 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வீட்டின் முன்பு ராதா விறகு அடுப்பில் பொங்கல் வைத்தார். அப்போது அடுப்பு எரிவதற்கு டர்பன் ஆயிலை ஊற்றினார். தடுக்க சென்ற பழனிசாமி மீதும், தீ பிடித்தது. அவர்களை காப்பாற்ற சென்ற அசோக்குமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனிசாமி நேற்று இறந்தார்.

சிறுமிக்கு தொந்தரவு: ஒருவர் கைது

திருப்பூரை சேர்ந்த, 23 வயது வாலிபர். இவரது அண்ணன் மகளான, 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார். சில நாட்களுக்கு முன், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி, நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. புகாரின் பேரில், வாலிபரை 'போக்சோ' வழக்கில், கே.வி.ஆர்., நகர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ