32 ஆண்டுகளாக ஏமாற்றிய அரசியல்வாதிகள்
பல்லடம் : ''இலவச பட்டா என்று கூறி, 32 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி விட்டனர்'' என, அறிவொளி நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் வசிக்கும், 1,500 குடும்பத்தினர் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், அறிவொளி நகர் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், தாசில்தார் சபரி தலைமையில் நேற்று நடந்தது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அறிவொளி நகரில் வசிக்கும், 1,008 குடும்பங்களில், ஏற்கனவே பணம் செலுத்திய, 8 பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். இவர்களை தவிர்த்து, மற்றவர்கள் நிலுவை தொகை, வட்டி ஆகியவற்றை செலுத்தியதும் பத்திரம் பெற்றுக் கொடுப்போம். 1993ம் ஆண்டு யார் பெயருக்கெல்லாம் நிலம் வழங்கப்பட்டதோ, அவர்களுக்கு பணம் செலுத்தியதும் பட்டா வழங்கப்படும். நிலத்தை விலை கொடுத்து வாங்கி வசிப்பவர்களுக்கு, அரசாணை வெளியிட்டால் மட்டுமே பட்டா வழங்க முடியும். தகுதியான பயனாளிகள், நிலுவையில் உள்ள தொகை, வட்டி ஆகியவற்றை தாமதிக்காமல் செலுத்துங்கள். இதையும், அரசு தள்ளுபடி செய்யும் என காத்திருப்பது வீண். பணத்தை விரைந்து செலுத்தி பட்டா பெற முயற்சி செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். பட்டா ஒருங்கிணைப்பு குழுவினர் கூறுகையில், 'இலவச பட்டா பெற்றுத் தருவதாக கூறியே, 32 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி வந்துள்ளனர். யார் - யார் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற பட்டியலை கொடுங்கள். அதன்படி, பட்டா பெறும் முயற்சியில் ஈடுபடுவோம். அடுத்த ஆறு மாதத்துக்குள், பட்டா பெற்றாக வேண்டும்,'' என்றனர். --- பல்லடம், அறிவொளி நகரில் பட்டா கேட்டு போராடிவரும் பொதுமக்களிடம், பட்டா வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கிய தாசில்தார் சபரி. 547 குடும்பங்களுக்கு என்ன தீர்வு? அறிவொளி நகரில் உள்ள, 1,008 குடும்பங்களை போன்றே, அம்பேத்கர் நகர், ஜே.ஜே., நகர், ரத்தினசாமி நகர், நரிக்குறவர் காலனி ஆகிய பகுதிகளில், 547 குடும்பங்களும் பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இவர்கள் வசிப்பது மேய்ச்சல் நிலம் என்பதால், இதற்கு மாற்றாக, 'உடுமலை அருகே, மூன்று மடங்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்ததும், பட்டா வழங்கப்படும்' என்று தாசில்தார் சபரி கூறியுள்ளார்.