உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு

எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு

திருப்பூர்; 'ஆண்டு தோறும், சர்வதேச பாலிதீன் பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக பெயரளவில் மட்டுமே வழங்கப்படும் விழிப்புணர்வு, யதார்த்த வாழ்க்கையில் பலன்தர வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.நவீனமும், தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், நிலம், நீர், காற்று உள்ளிட்ட பஞ்ச பூதங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், பாலிதீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் வகைகளை கட்டுப்படுத்துவது, பெரும் சவால் நிறைந்தததாக மாறியிருக்கிறது. உள்ளூர், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என, 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் திருப்பூரில், பாலிதீன் தவிர்ப்பு நடவடிக்கை என்பது, சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.உணவில் கலக்கும் விஷம்தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் நகரில், காலையில் குடிக்கும் டீ முதற்கொண்டு, உணவு, சாம்பார், சட்னி என அனைத்தும் பாலிதீன் பையில் அடைத்து தான் கொடுக்கப்படுகின்றன; பாலிதின் பையில் அடைக்கப்பட்ட திட மற்றும் திரவ உணவுகளை உட்கொள்வது, பேராபத்து நிறைந்தது என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.நாம் பயன்படுத்தும் பாலிதீன் சார்ந்த பொருட்கள், மனிதர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது, என, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தனர். இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பாலிதீன் நுண் துகள்கள் இருப்பதை, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

தாராள புழக்கம்!

சிறிய பெட்டிக்கடை முதல், பெரிய மால்கள் வரை பாலிதீன் பைகள், பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. மண்ணில் மக்கி, மண் வளத்தையும் அது சார்ந்த விளைபொருட்களை கூட, நஞ்சாக மாற்றும் பேராபத்து பாலிதீன் பைகளில் இருக்கிறது, என விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றனர்.குப்பையோடு குப்பையாக மண்ணில் கொட்டப்படும் பாலிதீன், மண்ணில் மக்காமல், மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறது. குப்பையை கிளறி, பாலிதின் பைகளோடு கலந்திருக்கும் உணவு மிச்சங்களை உண்ணும் கால்நடைகளின் வயிற்றில் பாலிதீன் பை தேங்கி, அவற்றின் உயிரை காவு வாங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கின்றன.

வேண்டாமே வெத்து காரணம்

'லட்சக்கணக்கான மக்கள் வாழும் திருப்பூரில் பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்துவது கடினம்; மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது என்ற காரணம், பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், திருப்பூரை விட பன்மடங்கு வளர்ச்சி பெற்ற பெங்களூரு உள்ளிட்ட பல பெரு நகரங்களில் கூட பாலிதீன் புழக்கம் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அதுதொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், திருப்பூரில் விழிப்புணர்வும் போதியளவில் இல்லை. பாலிதீன் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் வருவதில்லை.

உயிருக்கு வேட்டு

ஏற்கனவே, கேன்சர் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய் பரவல் அதிகரித்து வரும் திருப்பூரில், இனியும், பாலிதீன் அரக்கனை கட்டுப்படுத்தாமல் இருந்தால், மக்களின் ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என, அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.நேற்று, சர்வதேச நெகிழி தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அரசு துறை அலுவலகங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், பாலிதீன் தவிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆனால், அவற்றின் பலன் பூஜ்யம் என்று தான் சொல்ல வேண்டும்.எனவே, வரும் நாட்களிலாவது, பாலிதீன் தவிர்ப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.திருப்பூர், பி.என்., ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பூங்கா செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் தேங்கியுள்ளது. இதனால், மனிதர்களுக்கு சுகாதார சீர்கேடும், இயற்கைக்கு சுற்றுப்புறச் சூழல் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் நகரில், காலையில் குடிக்கும் டீ முதற்கொண்டு, உணவு, சாம்பார், சட்னி என அனைத்தும் பாலிதீன் பையில் அடைத்து தான் கொடுக்கப்படுகின்றன; பாலிதின் பையில் அடைக்கப்பட்ட திட மற்றும் திரவ உணவுகளை உட்கொள்வது, பேராபத்து நிறைந்தது என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

மாற்று பொருள் என்ன?

தாவரங்கள் மற்றும் உணவுக்கழிவுகளில் இருந்து, 'பயோ பிளாஸ்டிக்' தயாரிக்கும் தொழில்நுட்பம், தற்போது பரவலாக பேசப்படுகிறது. மண்ணில் மட்கும் தன்மையுள்ள பயோ பிளாஸ்டிக் பயன்படுத்தலாம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகித பைகள்; திரும்ப, திரும்ப பயன்படுத்த உதவும் துணி பைகளை பயன்படுத்தலாம். மேலும், மண்ணில், இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்ட சணல் பை பயன்பாடும் ஊக்குவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ