ஜல்லி தரம் மோசம்? சட்டசபை குழு அதிரடி
திருப்பூர்; சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், திருப்பூர், முதலிபாளையம் 'தாட்கோ' தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழிற்கூடங்களை நேற்று பார்வையிட்டனர்.தொழிற்பேட்டை வளாகத்தில் ரோடு பணிக்காக கொட்டப்பட்டிருந்த 'கிரஷர்' ஜல்லிக்கற்களை கையில் அள்ளி சோதித்த குழு தலைவர் நந்தகுமார், ''எம்.சாண்ட் கழிவு அதிகம் கலந்துள்ளது; இவற்றை பயன்படுத்தினால் ரோடு அமைத்த பிறகு, கற்கள் நகர்ந்து, ரோடு நெகிழ்ந்து விடும்; வலுவாக இருக்காது; பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்,'' என்று அறிவுறுத்தினார். அலுவலர் ஒருவர், பாலிதீன் கவரில், 'கிரஷர்' ஜல்லியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்.கலெக்டர் கிறிஸ்துராஜிடம் இதுகுறித்து பேசிய சட்டசபை முதன்மை செயலர் சீனிவாசன், ''ரோடு பணிக்கு பயன்படுத்தும் கட்டுமான பொருட்களை மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, இரண்டு வாரத்துக்குள் அறிக்கை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.