திருமுருகன்பூண்டி என்றாலே நினைவுக்கு வருவது, சிற்ப தொழில். தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களில் அருள்பாலிக்கும் கடவுளர்களின் சிலைகள், இங்கு சிற்பக்கலைஞர்களால் செதுக்கப்பட்டது தான். அதேபோல், அனுப்பர்பாளையத்தின் அடையாளம் பாத்திர தொழில். மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து தான் பாத்திரங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, பானை, நகை தயாரிப்பு, மர வேலைபாடு என, உலோக வேலைபாடுகள் நிறைந்த இடமாக அவிநாசி, பூண்டி, அனுப்பர்பாளையம் பகுதிகள் இருந்து வருகின்றன. 'இவை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நல்லாறு நாகரிகத்தின் அடையாளங்கள்' என்கிறார், வீர ராஜேந்திரன் வரலாற்று ஆய்வு மைய மக்கள் தொடர்பாளர் பொன்னுசாமி. இது குறித்து, பொன்னுசாமி கூறியதாவது: மனித நாகரிகத்தின் துவக்கத்தில், விலங்குகளை வேட்டையாடிய நிலையில் தான் மனித சமூகம் இருந்திருக்கிறது. பின், காட்டு விலங்குகளுடன் பழக்கப்பட்டு, மேய்ச்சல் சமூகமாக மாறியிருக்கிறது. தொடர்ந்து, பல்வேறு பயிர்களை விளைவிக்கும் வேளாண் தொழிலை கற்று, வேளாண் சமூகமாக மாறியிருக்கிறது. கடந்த, 7,000 முதல், 9,000 ஆண்டுகளுக்கு முன், தங்களின் தானியங்களை சேமித்து வைக்க மண்பாண்டம் தயாரிக்க துவங்கியிருக்கின்றனர். அந்த காலக்கட்டத்தில் தான் ஊர்கள் உருவாகின. மண் பானைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், உலோகங்களை கண்டுபிடித்தனர். ஐந்தொழில் புரியும் 'விஸ்வகர்மா' அதன்படி, இரும்பு வேலை செய்யும் கொல்லர், வெண்கலம் மற்றும் செம்பு வேலைப்பாடு செய்யும் வெண்கலக் கன்னார், மர வேலைபாடு செய்யும் தச்சர், கல் சிற்பம் செய்யும் ஸ்தபதி, ஆபரணம் தயாரிக்கும் தொழில் செய்யும் பொற்கொல்லர் என, உலோக வேலை செய்வோர் 'விஸ்வகர்மா' எனப்படும், ஐந்தொழில் செய்வோராக இருக்கின்றனர்.தமிழகத்தில் மாமல்லபுரம், கும்பகோணம் சுவாமிமலை, திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம், பூண்டி, அவிநாசி ஆகிய இடங்களில், இந்த ஐந்தொழில் செய்வோர் பரவியுள்ளனர். அதற்கு காரணம், இத்தகைய உலோக தயாரிப்புக்கு தேவையான செம்பு உள்ளிட்ட கனிம பொருட்கள், சிறுசிறு துகள்களாக, அந்த இடங்களையொட்டியுள்ள ஆற்றில் அடித்து வரப்படும்; அதை சேகரித்து, தங்களின் தொழிலுக்கான மூலப்பொருளாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய கனிம வளம், நிறைந்ததாக நல்லாறு இருந்ததால் தான், ஐந்தொழில் செய்வோர் நல்லாற்றங்கரை ஒட்டிய ஊர்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். நல்லாற்றங்கரையில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே ஊர்கள் இருந்துள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண்பானை ஓடு உள்ளிட்டவை இன்றும் கூட, ஆய்வின் போது அகப்படுகிறது. அனுப்பர்பாளையத்தை ஒட்டிய பெரியபாளையம், ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் வணிக மையமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ, 300 ஏக்கர் நில பரப்பில் மிகப்பெரிய ஏரியும் இருந்திருக்கிறது. பரிசல் வாயிலாக வணிக பொருட்களுக்கான வியாபார பரிவர்த்தனை நடந்திருக்கிறது. முக்கியமாக, வணிகர்கள் பெயர் தாங்கிய கல்வெட்டு இருப்பதும் கூட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பூண்டி என்பதற்கு 'முக்கியமான பகுதியின் நுழைவாயில்' என்ற அர்த்தம் உண்டு. நல்லாறு என்பது, சிறிய ஆறாக இருப்பினும், மிகப்பெரும் நாகரித்தின் அடையாளம் என்று சொல்வதில் மிகையல்ல. அவற்றை மீட்டெடுப்பது, தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கு சமம் வீடுகளில் சேவல் வளர்ப்பு சிந்து சமவெளி நாகரிக பண்பாட்டின் அடையாளமாக செம்பு இருந்திருக்கிறது. அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் சேவல் வளர்ப்பார்கள். இவை, அவர்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும். அதேபோன்று, மாடு, ரேக்ளா பந்தயம் ஆகியவையும் பின்னி பினைந்திருக்கும். இப்போதும் கூட, அனுப்பர்பாளையத்தில் வசிக்கும் பலரது வீடுகளில் சேவல் வளர்ப்பை பார்க்க முடியும். சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளங்களை நல்லாற்றங்கரையில் பார்க்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.