முழுமையான இழப்பீடு வழங்க போராட்டம் உயர் அழுத்த மின் வழித்தட பணி நிறுத்தம்
உடுமலை: விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கியபின், உயர் மின் வழித்தட பணியை மேற்கொள்ள வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அருகே, ஜோத்தம்பட்டி, மைவாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, தேனி மாவட்ட பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் உயர் மின் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, உயர் மின் கோபுரம் மற்றும் ஒரு சில வழித்தடத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் வழித்தடம் அமையும் விவசாய நிலங்கள் மற்றும் இப்பணிக்காக அழிக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட சாகுபடி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ள மின் வாரிய அதிகாரிகள் வந்தனர். அவர்களை முற்றுகையிட்டு, பணிகளை தடுத்த விவசாயிகள், '' உயர் மின் கோபுரங்கள் மற்றும் மின் வழித்தடத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குரிய நிலத்திற்கான இழப்பீடு மற்றும் அழிக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்கிய பின் பணியை தொடருங்கள்'' என வலியுறுத்தினர். மின் வாரியம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். மடத்துக்குளம் தாசில்தார் தலைமையில், விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி, விரைவில் இழப்பீடு வழங்கப்படும்; அதுவரை பணிகள் மேற்கொள்ளப்படமாட்டாது'' என உறுதியளிக்கப்பட்டது இதனையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.