உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அடிப்படை வசதி கோரிக்கை களத்தில் இறங்கி போராட்டம்

 அடிப்படை வசதி கோரிக்கை களத்தில் இறங்கி போராட்டம்

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சி வார்டுகளில், அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் 9வது வார்டில் புதிய போர்வெல் மோட்டார் பொருத்தவும், 23வது வார்டில் பழுதான போர்வெல்லை உடனடியாக சரி செய்யவும், நெசவாளர் காலனி பகுதிக்கு நல்லாறு கரையோரம் இருந்த பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவும், குடிநீர், உப்பு தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தில் மனு அளித்த வந்தனர். ஆனால், கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஒன்று கூடி, நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன், மக்கள் பிரச்னைகளை தீர்க்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் சார்பில், மாரிமுத்து தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிறைவேற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், 'எவ்வளவு முறை மனு கொடுத்தாலும், நகராட்சி நிர்வாகம் எதனையும் கண்டுகொள்வதில்லை. இப்படியே இருந்தால் வேறு ஊருக்கு போக வேண்டியது தான். பல ஆண்டுகளாக பலமுறை சலித்து போய் தான், இப்போது தெருவுக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ