-நமது நிருபர் -கோர்ட் உத்தரவுப்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி, திருப்பூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், விவசாய அமைப்பினர் மனு அளித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் மலரவன்: திருமூர்த்தி அணையிலிருந்து, முதல் மண்டல பாசனத்துக்கு, ஜன. 10ம் தேதிக்கு முன்னர் தண்ணீர் திறந்து, ஐந்து சுற்று வழங்க வேண்டும். இது தொடர்பாக, திருமூர்த்தி கோட்டம், உடுமலை நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு, கலெக்டர் உத்தரவிடவேண்டும். தண்ணீர் திறக்கும்முன், அனைத்து கால்வாய்களையும் துார்வார வேண்டும். தாராபுரம் தாலுகா, உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தலைவர் திருஞானசம்பந்தமூர்த்தி: உப்பாறு அணைக்கு, 300 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டு தற்போதுவரை, 230 மில்லியன் கன அடி தண்ணீரே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 மில்லியன் கன அடி தண்ணீரை உப்பாறு அணைக்கு வழங்க வேண்டும். வட்டமலைக்கரை ஓடை நீர் தேக்கத்துக்கு, பாலாற்று வெள்ளம் இல்லாத காலங்களில் திருமூர்த்தி நீர் தேக்கத்திலிருந்து தினசரி, வினாடிக்கு 300 கன அடி வீதம், 10 நாட்களுக்கு, மொத்தம் 240 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கலாம். பரம்பிக்குளம் - ஆழியாறுநீர் தேக்கங்களில் தண்ணீர் திருப்திகரமாக இருக்கும் காலங்களில், மண்டல பாசனங்கள் துவங்கும் முன்னரோ அல்லது முடிவடைந்த பின்போ வழங்கலாம். வறட்சி காலங்ளில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட நீர் பெற, வட்டமலைக்கரை ஓடை விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிற நிபந்தனையோடு தண்ணீர் வழங்கலாம். ஏற்கனவே உப்பாறு நீர் தேக்கத்துக்கு, பி.ஏ.பி. திட்டத்திலிருந்து, 300 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, உப்பாறு நீர் தேக்கத்துக்கு நீர் வழங்கிய பின்னரே, வட்டமலைக்கரை ஓடை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் வழங்கலாம் என, கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, உப்பாறு நீர் தேக்கத்துக்கு நடப்பாண்டுக்கான, 300 மில்லியன் கன அடி தண்ணீரை வழங்கியபின்னரே, வட்டமலைக்கரை ஓடைக்கு வழங்கவேண்டும். இல்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.