தரமான உற்பத்தி தருமே உறுதியான வளர்ச்சி!
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சந்தித்து வந்த பிரச்னைகள் மறைய துவங்கியுள்ளன. இயல்புநிலைக்கு வந்த தொழில், மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.ஏற்றுமதி வர்த்தகத்தில், புதிய ஆர்டர்கள் வருவது அதிகரித்துள்ளது போல், உள்நாட்டு வர்த்தகத்திலும், புதிய எதிர்பார்ப்புகளுடன் ஆர்டர் வரத்தும், விசாரணையும் அதிகரித்துள்ளது. வழக்கமான உற்பத்தியுடன், புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து, புதிய கோணத்துடன் உற்பத்தியை கட்டமைக்க, தொழில்முனைவோர் தயாராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தீபாவளி பண்டிகைகால விற்பனை நன்றாக இருந்ததாக, பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகால ஆர்டர்களும் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.நுால்விலையும், கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து சாதகமான சூழல் உருவாகியுள்ளது. புதிய உற்பத்தியை துவக்க, அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகம் வலுவாக மாறியுள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கான தேவையும் அதிகரித்துள்ளது.சைமா சங்க உறுப்பினர்கள், நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, உறுதியான வளர்ச்சியை எட்ட தயாராக வேண்டும். பின்னலாடை உற்பத்தியாளர்கள், எப்போதும் அரசு உதவியை எதிர்பார்த்து இருக்காமல், உற்பத்தி தரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேர்மையான வணிகர்களை அடையளம் கண்டு, சிறப்பாக வர்த்தகம் செய்ய, உறுப்பினர்கள் தயாராக வேண்டும்.இவ்வாறு, அவர்தெரிவித்துள்ளார்.