இயல்பை விட அதிகரித்த மழை; உரம், விதைகள் இருப்பு திருப்தி
உடுமலை; நடப்பாண்டு மூன்று மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்கிறது. இதற்கு மழை நீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது.மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, கடந்த மூன்று மாதத்தில், 45.36 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை விட, 27.98 மி.மீ., மழை கூடுதலாக கிடைத்துள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானிய விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது.மாவட்டத்தில், நெல் 13.12 டன், தானிய பயிறுகள், 21.34 டன், பயறு வகை பயிறுகள் 24.06 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 20.55 டன் இருப்பு உள்ளது. மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் போதியளவு இருப்பு உள்ளது.தற்போது, யூரியா, 2,722 டன், டி.ஏ.பி., 978 டன், காம்ப்ளக்ஸ் உரம், 4 ஆயிரத்து, 914 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 662 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.