கோடை சீசனிலும் சாகுபடி மழையால் மாற்றம்
உடுமலை; கோடை கால மழை பெய்து வருவதால், காய்கறி மற்றும் தானிய சாகுபடிக்கான பணிகளை உடுமலை பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக கோடை கால மழை பெய்து வருகிறது. கோடை உழவுக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, விளைநிலங்களில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுவது வழக்கம்.கோடை காலத்தில், அதிக வெயில் காரணமாக, செடிகள் முளைப்பு, வளர்ச்சி பாதிப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், கோடை சீசனில், விளைநிலங்களில் சாகுபடி இருக்காது.இந்தாண்டு, கோடை மழை குறிப்பிட்ட இடைவெளியில், பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.எனவே, தற்போதே, விளைநிலங்களில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக உழவு செய்த விளைநிலங்களில், வாய்க்கால், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை துவக்கியுள்ளனர்.தொடர்ந்து, காய்கறி சாகுபடிக்கு, நாற்று நடுதல், தானிய சாகுபடிக்கு விதைப்பு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.