மலை கிராமத்தில் இடியும் வீடுகளை புதுப்பியுங்க!
உடுமலை; ஈசல் திட்டு மலை கிராமத்தில், இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளை புதுப்பிக்க அரசு உதவ வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் உள்ளன. இதில், உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஈசல்திட்டு மலை கிராமம் உள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஈசல்திட்டு கிராமத்தில் மண் சுவரில், மேற்கூரையாக தகர ஷீட் அமைத்து அவ்வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்தாண்டு பெய்த கனமழைக்கு, பெரும்பாலான வீடுகள் பாதிக்கப்பட்டன. பலத்த காற்றுக்கு மேற்கூரையும், தொடர் மழையினால் சுவர்களும் இடிந்தது. வீடுகளை புதுப்பிக்க எவ்வித வசதிகளும் இல்லாததால், நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.மத்திய, மாநில அரசுகளின் சிறப்புத்திட்டத்தில், புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், குடியிருப்புக்கு வழங்கப்பட்ட சோலார் தெருவிளக்குகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால், அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.வீடுகளுக்கும், குடியிருப்புகளுக்கும் புதிதாக சோலார் பேனல்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறையினரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.