| ADDED : ஜன 12, 2024 12:00 AM
உடுமலை:உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணியர் எதிர்பார்க்கின்றனர்.கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்வர். அப்போது தற்போது இருக்கும் ரயில்களில் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே, உடுமலை வழியாக, ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.