வீடு வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் ஏப்பம்; மீட்டுத்தர கலெக்டரிடம் இளைஞர் கண்ணீர் இது உருக்கம்
திருப்பூர்; வீடு வாங்கித்தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் காலம் தாழ்த்துவதாக கூறி, சூரிய நாராயணன், தனது தாயாருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.பல்லடம், காமராஜ் நகரை சேர்ந்த சூரியநாராயணன். இவர் தனது தாய் கற்பகத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்ட அரங்கிற்கு வெளியே போர்டிகோவில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் மனு அளியுங்கள் என்றனர்.கலெக்டரிடமும், எஸ்.பி.,யிடமும் எத்தனை முறைதான் மனு அளிப்பது. ஒன்றரை ஆண்டுகளாக மனு அளித்தும், வீடு வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன், எனது தொகையை மீட்டுக்கொடுங்க; மோசடி செய்வதவர்கள் மீது நடவடிக்கை எடுங்க' என கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறினார். அவரை சமாதானப்படுத்திய போலீசார், குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கச் செய்தனர்.பாதிக்கப்பட்ட சூரிய நாராயணன் கூறியதாவது:பல்லடம் காமராஜ் நகரில், தாய் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் போக்கியத்துக்கு வீடு வாங்கி வசித்து வருகிறேன். வீட்டு புரோக்கர் வாயிலாக அறிமுகமான ஒருவர், சொந்த வீடு வாங்கித்தருவதாக கூறி, என்னிடமும், எனது தம்பி கண்ணனிடம், ஏழுரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் என, மொத்தம் 11 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். வங்கியில் கையகப்படுத்தப்பட்ட வீடு என்பதால், யாரிடமும் தகவல் சொல்ல வேண்டாம் என்று கூறி, ஒரு வீட்டை காண்பித்தனர்.ஆனால், அந்த வீட்டை வாங்கித்தராமல் மாதக்கணக்கில் இழுத்தடித்தனர். சந்தேகமடைந்து, பணத்தை திருப்பிக்கேட்டபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். குடுப்பத்தினருக்கு தெரியும் என்பதால், அவரது அண்ணன், இரண்டு லட்சம் ரூபாயை எங்களுக்கு திருப்பிக் கொடுத்தார். மீதமுள்ள ஒன்பது லட்சம் ரூபாயை மீட்டுத்தரக்கோரி, கடந்த 2023ல், பல்லடம் போலீசில் புகார் அளித்தேன்.கலெக்டர், எஸ்.பி.,யிடமும் பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனாலும், மோசடி செய்தவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட எனது தம்பிக்கு மருத்துவ செலவுக்கு கூட பணமின்றி, இறந்து விட்டார். இரண்டு ஆண்டுகள் பொறுமையாக இருந்து, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். மோசடி நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தரவேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.