துாய்மைப்பணியாளர் போராட்டம்; இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தனியார் நிறுவனம் மூலம் துாய்மைப் பணி மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இதில் மண்டலம் 1 மற்றும் 4 ஆகியவற்றில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், வாகன டிரைவர்கள் இம்மாத சம்பளம் தாமதம் என்றும், தீபாவளி போனஸ் கேட்டும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் முதல் வேலைக்குச் செல்லவில்லை. நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆலாங்காடு, மாட்டுக் கொட்டகை வளாகத்தில் திரண்டனர். சி.ஐ.டி.யு., துாய்மைப் பணியாளர் சங்க தலைவர் ரங்கராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. துாய்மைப் பணியாளர்களும், வாகன டிரைவர்களும் தங்கள் பணியைப் புறக்கணித்து ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மண்டலங்களில் பெருமளவு துாய்மைப்பணி பாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அமித், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ஊழியர் தரப்பில் உடனடியாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்; எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திடீரென சிலர் மறியல் செய்ய முயற்சித்தனர். மாட்டுக் கொட்டகை வளாகத்தின் முன் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் இம்மாத சம்பளம் உடனடியாக வழங்கவும், போனஸ் மற்றும் இதர கோரிக்கை குறித்து நாளை (இன்று) பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. பின் தர்ணாவில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இரண்டு மண்டலங்களில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பல பகுதிகளிலும் நேற்று துாய்மைப்பணி பாதிக்கப்பட்டது.