உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிரான்ஸ்பார்மர் உபகரணங்கள் தொடர் திருட்டு; பாதித்த விவசாயிகள் போராட திட்டம்

டிரான்ஸ்பார்மர் உபகரணங்கள் தொடர் திருட்டு; பாதித்த விவசாயிகள் போராட திட்டம்

உடுமலை; உடுமலை அருகே, டிரான்ஸ்பார்மர் உபகரணங்களை குறிவைத்து திருடும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்; குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர். உடுமலை அருகே கொங்கல்நகரம் சுற்றுப்பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. கொங்கல்நகரம், ஆலாமரத்துார் துணை மின்நிலையங்கள் வாயிலாக, அப்பகுதியிலுள்ள பல ஆயிரம் விவசாய மின் இணைப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக விளைநிலங்கள் மற்றும் இதர பகுதிகளில், டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக, டிரான்ஸ்பார்மர் உபகரணங்களை குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருகிறது. நேற்று முன்தினம், அடிவள்ளி - ஜோத்தம்பட்டி வழித்தடத்திலுள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில், காயில் மற்றும் இதர உபகரணங்களை திருடிச்சென்றுள்ளனர். இது அப்பகுதியில் நடைபெறும் மூன்றாவது சம்பவமாகும். இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: மின்சார உபகரணங்களை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருகிறது. விளைநிலங்களில், கேபிள் வயர்கள் திருடியவர்கள், தற்போது வரிசையாக டிரான்ஸ்பார்மரில் திருடி வருகின்றனர். அடிவள்ளி, வல்லக்குண்டாபுரம் பகுதிக்கு பிறகு, தற்போது ஜோத்தம்பட்டி பகுதியில் டிரான்ஸ்பார்மர் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து, குடிமங்கலம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு சொந்தமான உபகரணங்கள் திருடப்படுவதை தடுக்க, சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை உபகரணங்கள் திருடு போகும் போதும், பல லட்சம் ரூபாய் மின்வாரியத்துக்கும், சீரமைப்பு பணிகளுக்காக விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாயும் செலவாகிறது. பொது இடங்களிலுள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு, சுற்றிலும் கம்பிவேலி அமைக்க வேண்டும். இத்தகைய திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறியாகி விடும். நடவடிக்கை தாமதம் ஆனால், போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை