உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டுக்கூடு விலை உயர்வு; உற்பத்தி சரிவால் வரத்து பாதிப்பு

பட்டுக்கூடு விலை உயர்வு; உற்பத்தி சரிவால் வரத்து பாதிப்பு

உடுமலை; உடுமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பல்லடம், பழநி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளை விவசாயிகள், உடுமலை மைவாடி, தர்மபுரி, கோவை, கர்நாடக மாநிலம் ராம்நகர் உள்ளிட்ட அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, பட்டுக்கூடு உற்பத்தியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற முட்டை வினியோகம், இளம் புழு வளர்ப்பு மனைகளில் கண்காணிப்பு இல்லாதது, சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர். தற்போது, பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ள நிலையில், அங்காடிகளுக்கு இதன் வரத்து சரிந்துள்ளது. இதனால், விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் சராசரியாக, ரூ.450 முதல், 500 வரை விற்று வந்த நிலையில், தற்போது, ரூ.650 முதல், 720 வரை உயர்ந்துள்ளது. நேற்று மைவாடி பட்டுக்கூடு அங்காடிக்கு, 350 கிலோ பட்டுக்கூடு வரத்து காணப்பட்டது. ஒரு கிலோ அதிக பட்சமாக ரூ.667 ஆகவும், குறைந்தபட்சமாக, ரூ.642 என சராசரியாக, ரூ.656.55க்கு விற்பனையானது. தர்மபுரி அங்காடியில், அதிகபட்சமாக, ரூ.720க்கும் விற்பனையாகியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது : பட்டுக்கூடு உற்பத்தி தொழில், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. தற்போது, பல்வேறு காரணங்களால் உற்பத்தி சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 100 முட்டை தொகுதிக்கு, 100 கிலோ வரை உற்பத்தி இருக்கும். தற்போது வளர்ந்த புழுக்களில், 40 சதவீதம் வரை கூடுகள் கட்டாமல், வித்தியாசமான பாதிப்பு ஏற்பட்டு, 100 முட்டை தொகுதிக்கு, 60 கிலோ மட்டுமே உற்பத்தி கிடைக்கிறது. இதனால், மார்க்கெட்களுக்கு வரத்து பெருமளவு குறைந்துள்ளதால், விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்ந்தாலும், உற்பத்தி சரிவால் விவசாயிகள் பாதித்துள்ளனர். உற்பத்தி பாதிப்புக்குரிய காரணங்களை ஆய்வு செய்து, தொழில் நுட்ப உதவிகளை வழங்க பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !