'என்ன இருந்தாலும், அந்த காலத்து சாப்பாடு மாதிரி வருமா?'புதுசு புதுசா வரும் நோய்களும், உடல் சோர்வும், அசதியும், இந்த காலத்து இளசுகளை இப்படித்தான் புலம்ப வைத்திருக்கிறது. அதற்கு காரணம், உண்ணும் உணவில் ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாதது தான்.நோய் தீர்க்க எத்தனை மருந்து, மாத்திரைகள் வந்தாலும், 'ராகி, கம்பு, சோளம், நிலக்கடலை என, வரிசைக் கட்டும் சிறு தானியங்களை உண்பது தான், உடல் ஆரோக்கியம் காக்கும் ஒரே ரகசியம்' என, மருத்துவ உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது.அதனால் தான், கடந்தாண்டை, சிறு தானிய ஆண்டாக, ஐ.நா., சபை அறிவித்தது.வேளாண் துறை உட்பட, பல்வேறு துறையினர் சார்பில் சிறு தானிய பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது.ஆனால், முழு அளவில் அது மக்களை சென்று சேர்ந்திருக்கிறதா என்றால், பதில் சொல்ல சற்று சிந்திக்கத் தான் வேண்டும்.சிறு தானிய உணவு உட்கொள்ளும் பழக்கத்தை, வளரும் பிள்ளைகளிடத்தில் இருந்து உருவாக்க வேண்டும். இதை உணர்ந்து, சமீபத்தில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது, கருணாகரபுரி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில், கடலை மிட்டாய் வழங்க ஏற்பாடு செய்தார், பள்ளி தலைமையாசிரியை நாகலட்சுமி.''மிட்டாய்க்கு பதில் கடலை மிட்டாயை ருசி பார்த்த குழந்தைகளுக்கு, அவற்றை உண்ணும் ஆவல் தானாகவே வரும். அதே போன்று, சத்து மாவு உருண்டை, ராகி, கம்பு, சோளம் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு வழங்கி பழகும் போது, சிறுதானியங்களை உண்ணும் பழக்கம் அவர்களிடம் வந்து விடும்'' என்கின்றனர் பெற்றோர்.