அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை மூன்று பேரை தேடும் தனிப்படை
திருப்பூர் : தொழில் பிரச்னையில் தி.மு.க., வினர் தலையிட்டு மிரட்டியதாக கூறி, அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை செய்த விஷயத்தில் தலைமறைவாக உள்ள, மூன்று பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வானந்தம், 37; குண்டடம் மேற்கு ஒன்றியத்தின் அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர். மக்காசோளம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார்.தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சிலருடன் செல்வானந்தத்துக்கு பிரச்னை ஏற்பட்டது.தொழில் பிரச்னையில் தி.மு.க., வினர் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டு, கடந்த, 2 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, குண்டடம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த தி.மு.க., மண்டல பொறுப்பாளர் மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முத்துகுமார் மற்றும் வெங்கடேஷ், சீனிவாசன் என, நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்து, நேற்று முன்தினம் சீனிவாசனை கைது செய்து, மிரட்டி வாங்கிய காசோலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.வழக்கில் தொடர்புடைய தி.மு.க., பிரமுகர்கள் உட்பட, மூன்று பேரை கைது செய்ய, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை உள்ளிட்ட பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்து, அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.