திருப்பூர்:வாலிபாளையம் பகுதியில் நகர் நல மையம் கட்டுமானப் பணி துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 35வது வார்டு வாலிபாளையம், சடையப்பன் கோவில் எதிரேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், நகர் நல மையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கி, கட்டடத்துக்கு துாண்கள் அமைக்க குழி தோண்டும் பணி நடந்தது.இப்பணியின் போது, குழி தோண்டிய இடங்களில் மண் தளர்வாக இருந்ததோடு, சில குழிகளில் ஏழு அடி ஆழத்திலும், சில குழிகளில், 10 அடி ஆழத்திலும் நீர் ஊற்று கிளம்பி, தண்ணீர் சேகரமாகியது. இதனையடுத்து, கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த, மண் மாதிரிகள் சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதனடிப்படையில், கட்டுமானப் பணியில் தொழில் நுட்ப ரீதியாக மாறுதல் செய்து, கான்கிரீட் தளம் அந்த இடத்துக்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி இரண்டொரு நாளில் தொடரும் என மாநகராட்சி பொறியியல் பிரிவினர் தெரிவித்தனர். காரணம் என்ன?
நகர் நல மையம் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ள இடம் மந்திரிவாய்க்கால் கட்டுமானத்துக்கு மிக அருகில் உள்ளது. மேலும், நொய்யல் ஆற்றின் கரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மந்திரிவாய்க்கால் கடந்து செல்லும் வழியிலும் இது போல் நீரூற்று ஏற்படுவது வழக்கமாக உள்ளது.இதனால், சுற்றுப்பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்களில் அஸ்திவாரம் மற்றும் பில்லர் அமைப்பது போன்ற பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.