மாநில முதல்வர் கோப்பை: திருப்பூருக்கு 18 பதக்கங்கள்
திருப்பூர்: மாநில முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில், திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 21வது இடம் பெற்றது. மூன்று தங்கப்பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.சென்னையில் மாநில முதல்வர் கோப்பை போட்டி, கடந்த 4ல் துவங்கி, 24ல் நிறைவு பெற்றது. 36 வகை விளையாட்டு போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனிநபர், குழு விளையாட்டு போட்டி களில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனையர் மூன்று தங்கம், நான்கு வெள்ளி, 11 வெண்கலம் உட்பட, 18 பதக்கங்களை கைப்பற்றி, 21வது இடம் பெற்றனர். தங்கம் வென்றவர்கள்
கல்லுாரி மாணவியருக்கான, 100 மீ., பிரிவில், ஏஞ்சல்சில்வியா; பள்ளி மாணவியருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில், சைலேஸ்வரி மற்றும் சாஸ்தாயினி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். வெள்ளி வென்றவர்கள்
ஏஞ்சல்சில்வியா 200 மீ., ஓட்டத்திலும்; மனோஜ்குமார், நீளம் தாண்டுதலிலும்; ரிஸ்வந்த் பேட்மின்டனிலும்; அலாவுதீன் ஜூடோவிலும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். வெண்கலம் வென்றவர்கள்
பிரேமா, 100 மீ., ஓட்டம்; ரிதுவர்ஷினி - விதுவர்ணா ஜோடி பேட்மின்டன், அர்ச்சனா, 50 மீ., 100 மீ., பேக்ஸ்டோக் நீச்சல் போட்டி; ஸ்ரீ வர்ஷினி மற்றும் அஷ்வின் வாள் சண்டை போட்டி; தனுஜா குத்துச்சண்டை (40 - 42 கிலோ பிரிவில்)ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2 பதக்கம் வென்ற மாணவி
மாணவி ஏஞ்சல்சில்வியா 100 மீ., - 200 மீ., இரண்டிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் (அறிவுசார் குறைபாடு) மாணவியர் பிரிவில் தமிழ்ச்செல்வி, 100 மீ., ஓட்டத்தில், வெண்கலம் வென்றார். அரசு ஊழியர்களுக்கான பிரிவில், சிக்கந்தர் - மகேஷ் ஜோடியினர், கேரம் போட்டியில், இரட்டையர் பிரிவில் பங்கேற்று, வெண்கலம் வென்றது.முதலிடம் பெற்றவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய்; இரண்டாமிடம் பெற்றருக்கு, 75 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடம் பெற்றவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு தமிழக அரசால் வழங்கப்பட்டது.திருப்பூருக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.