இடுவாயில் குப்பை கொட்ட கடும் எதிர்ப்பு: ஆடு, மாடுகளுடன் குவிந்த பொதுமக்கள்
பல்லடம்: பல்லடம் அருகே, குப்பை விவகாரத்துக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம், சாலை மறியலாக மாறியதை தொடர்ந்து, நுாற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் ஒன்றியம், இடுவாய் கிராமத்துக்கு உட்பட்டது, சின்னக்காளிபாளையம் கிராமம்; இங்கு, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காத்திருப்பு போராட்டம் நேற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கால்நடைகளுடன் வந்து, சி ன்னக்காளிபாளையம் கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க நிர்வாகிகள் செல்லமுத்து, ஈஸ்வரன், பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், ஹிந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், அதன் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை தாமதம் காலை, 9:00 மணி முதல் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாலை, 4:00 மணிக்குத்தான், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தனர். 'துாய்மைப்பணி மட்டுமே' கோர்ட் உத்தரவை பின்பற்றி பணிகள் செய்து வருவதாகவும், இப்போது துாய்மை செய்யும் பணி மட்டுமே நடந்து வருவதாகவும், குப்பைகள் இப்போதைக்கு எடுத்து வரப்போவதில்லை என்றும் உறுதி அளித்தனர். திட்டவட்ட மறுப்பு ஆனால் இதை ஏற்க மறுத்த போராட்ட குழுவினர், நாங்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதற்கு பதில் கிடைக்கும் வரை எந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் எழுந்து சென்றனர். திடீர் சாலை மறியல் ஆவேசமடைந்த பொதுமக்கள், பல்லடம், - மங்கலம் ரோடு, 63 வேலம்பாளையம் பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பொதுமக்களை கைது செய்ய முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட, 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக, ஒரு மணி நேரத்துக்கு மேல் மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.