வகுப்பறையில் மாணவி மரணம் உடுமலை அரசு பள்ளியில் அதிர்ச்சி
உடுமலை:உடுமலை அரசு பள்ளி வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவி, திடீரென சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையிலுள்ள பாரதியார் நுாற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 உயிரியல் கணித பிரிவில் படித்து வந்தவர் புவனேஸ்வரி, 17. கல்லாபுரம் கரட்டுபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பழங்குடியினத்தை சேர்ந்த முருகேசன் -தேவி தம்பதியரின் மகள், இவர், உடுமலை பாபுகான் வீதியிலுள்ள அரசு சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில், 6ம் வகுப்பு முதல் தங்கி படித்து வந்துள்ளார். பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், செப்., 22ம் தேதி நடக்கும் உயிரியல் பாடத்தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நேற்று மதியம், 1:00 மணிக்கு, பள்ளியிலிருந்து விடுதிக்கு உணவருந்த வந்துள்ளார். உணவருந்திய பின், 1:45 மணிக்கு பள்ளிக்கு திரும்பி சென்று, வகுப்பறையில் சக மாணவியருடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கமடைந்து, சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவியர், ஆசிரியர் சுமதி ஆகியோர் அவரை எழுப்ப முயன்றும் முடியாத நிலையில், உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.