கால்வாயில் மூழ்கி மாணவர்கள் பலி
உடுமலை; உடுமலை அருகே, பி.ஏ.பி., கால்வாயில் குளித்த மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை பெரியகோட்டை ஊராட்சி, மாரியம்மன் நகரைச்சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் மணிகண்டன், 13; காமராஜ் நகரைச்சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மோகன்பிரசாத், 13. இருவரும் காமராஜ் நகரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறைநாளையொட்டி, மாணவர்கள் இருவரும் தங்கள் குடியிருப்பு அருகிலுள்ள பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் குளிக்கச்சென்றுள்ளனர். மதியம் வீட்டை விட்டு சென்றவர்கள் திரும்பாததால், பெற்றோர் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் தேடியுள்ளனர். கிடைக்காததால், உடுமலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரண்டாவது நாளாக பெற்றோரும், உறவினரும் தேடிய போது, இந்திரா நகர் அருகே, கால்வாயில், மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.