உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / படிக்கும் வயதில் பாதை மாறக்கூடாது ; மாணவியருக்கு அறிவுறுத்தல்

படிக்கும் வயதில் பாதை மாறக்கூடாது ; மாணவியருக்கு அறிவுறுத்தல்

பல்லடம்; படிக்கும் வயதில் பாதை தவறுவதால், வாழ்க்கையையே இழக்கும் நிலை ஏற்படும் என, பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், மருத்துவர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். பல்லடம் அரசு கல்லூரியில், பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்ற துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் கலைச்செல்வி பேசியதாவது: இன்றைய தலைமுறை இளைஞர்கள் புகையிலை, போதைப் பொருட்கள் என, அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் எளிதில் அடிமையாகி விடுகின்றனர். படிக்கும் வயதில், தவறான பாதையில் செல்வதால், பள்ளியிலிருந்து பாதியில் நின்று விடுகின்றனர். இதன்பின், வீட்டில் இருப்பதும், வேலைக்குச் செல்வதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, படிக்க வேண்டிய இளம் வயதில், தவறான பாதைக்குச் செல்வதால் வாழ்க்கையே மாறிவிடுகிறது. நமது மூளை பக்குவம் அடைய சில ஆண்டுகள் தேவை. 40 வயதுக்கு மேல் ஆகியும் பக்குவம் அடையாதவர்களும் உள்ளனர். இளம் வயதில் பாலின ஈர்ப்பு என்பது அனைவருக்கும் வருவது இயல்பு. ஆனால், அதற்கான வயது இது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக அது குறித்து யோசிக்க வேண்டும். தவறானவர்கள் என்று தெரிந்தும் அவர்கள் பின்னால் செல்வது தவறானது. இதனால், வாழ்க்கையின் பாதையே மாறிவிடும். நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என, காதலிக்கும் சில ஆண்களும், குடிப்பழக்கம் உள்ளவர்களும் கட்டாயப்படுத்துவதுடன், அடிப்பதும் உண்டு. இதையெல்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அப்போதே அவர்களது உறவை துண்டித்து விடுங்கள். இது திருமணத்துக்குப் பின் மேலும் அதிக பிரச்னையை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார். வேதியியல் துறை தலைவர் ஜெயேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ