உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகரில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுங்க! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

நகரில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுங்க! நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

உடுமலை : உடுமலை நகரில் அபரிமிதமாக உள்ள விதி மீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:உடுமலை பஸ் ஸ்டாண்ட்டில், வணிக வளாக கடைகள், பயணியர் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். அதே போல், பஸ் ஸ்டாண்ட் முழுவதும், தள்ளுவண்டி மற்றும் தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கருத்தடை மேற்கொள்ள, 459 நாய்கள் மட்டுமே உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பெரியகோட்டை, கணக்கம்பாளையம், போடிபட்டி ஊராட்சிகளிலிருந்தும் நாய்கள் வருகின்றன. வார்டுக்கு, ஆயிரம் நாய்கள் சுற்றி வரும் நிலையில், கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளது.பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வார்டுகளில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடிகால்கள் துார்வாரப்படாமலும், துார்வாரிய கழிவுகள் அகற்றாமலும், பிரதான ரோடுகளில் மழை நீர் வடிகால்கள் இணைக்கப்படாமலும் உள்ளது.கொசு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில், கொசு மருந்து அடிப்பது வினோதமாக உள்ளது. மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து ஓடுகிறது. புகார் தெரிவித்தால் சரி செய்ய, 15 நாட்களுக்கு மேல் ஆகிறது.அண்ணா குடியிருப்பு அருகே, செல்லம்மாள் நகர் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தும், பூங்கா ஒதுக்கீடு இடங்களும் விற்பனை செய்யப்பட்டு, வீடுகள் அமைந்துள்ளன.நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். ஐஸ்வர்யா நகர் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பூங்கா இடத்தில், ஐ.எம்.ஏ., ஹால் அமைக்கப்பட்டு, வணிக ரீதியில் செயல்படுகிறது.இதனை மீட்பதற்கு பதில், 2 கி.மீ., துாரம், நகருக்கு அருகிலுள்ள கிராமப்பகுதியில், நிலம் வாங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா மற்றும் ஒதுக்கீடு நிலங்களை, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்று, அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், சட்ட விரோதமாக அளிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, பூங்கா நிலத்தை மீட்க வேண்டும்.நகரில், பிரதான ரோடுகளில் அமைந்துள்ள, வணிக வளாகங்கள், கடைகள், பக்க திறவிடம், பார்க்கிங் இல்லாமல், விதி மீறி கட்டப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., வங்கி, பெரிய வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் என, 80 சதவீதத்திற்கும் மேல், உடுமலை நகரில் விதி மீறல் கட்டடங்கள் அமைந்துள்ளன.இதனால், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, ரோட்டிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதோடு, நகரிலுள்ள பெரும்பாலான ரோடுகளை ஆக்கிரமித்தும், ஏராளமான கட்டடங்கள், கடைகள் கட்டப்பட்டுள்ளது. உடுமலை நகரில் அபரிமிதமாக உள்ள விதி மீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

பதில் அளித்து தலைவர் மற்றும் அதிகாரிகள் பேசியதாவது:கட்டட அனுமதி பெறும் போது, பக்க திறவிடம், பார்க்கிங் என கூறி, கட்டட அனுமதி பெறுபவர்கள், அவற்றை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்கள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.படிப்படியாக அனைத்து கட்டடங்களும் மறு ஆய்வு செய்து, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் திட்டத்தில், ஆண் நாய்கள் மட்டுமே கணக்கெடுக்கப்படுகிறது. கூடுதலாக இருந்தாலும், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.மழை நீர் வடிகால்கள் அமைக்க, ரூ. 8.30 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட்டிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாலை நேரங்களிலும், கொசு மருந்து அடிக்கப்படும். சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ