உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தன்னம்பிக்கையுடன் மிளிர்ந்த மாற்றுத்திறன் மாணவர்கள்!

தன்னம்பிக்கையுடன் மிளிர்ந்த மாற்றுத்திறன் மாணவர்கள்!

திருப்பூர்; முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் உரிய ஊக்குவிப்பு வழங்கினர். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. நேற்று, சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. இதில், பார்வை குறைபாடுள்ள, வாய் பேச முடியாத, காது கேளாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். அவர்களுக்கான குண்டெறிதல், 100 மீ., கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தங்களது பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் படி, வெற்றியை இலக்காக கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களது பெற்றோர் வழங்கிய ஊக்குவிப்பும், மாணவ, மாணவியரை ஆர்வமுடன் பங்கேற்க செய்தது. நம்பிக்கையைவிதைக்கணும்! ராம்பிரசாத், பயிற்றுனர், அரசு மாதிரி பள்ளி: மாற்றுத்திறனாளிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசும் போது, அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வருகிறது. அதை தவிர்த்து, முதலில் அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். சில மாணவ, மாணவியர் மாவட்ட, மாநில அளவிலும் வெற்றி பெறுகின்றனர். மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் போது, பிறரை விட, 10 மடங்கு நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் அவர்கள் இடம் பிடிக்கும் போது, இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பணியை பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது. திறமையைபட்டை தீட்டணும்! மணிகண்டன், பயிற்றுனர், சாய்கிருபா சிறப்பு பள்ளி: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை இதுபோன்ற விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து வந்து, பார்வையாளராக பங்கேற்க செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்கள் இதுபோன்ற போட்டி களில் பங்கேற்கும் போது, தாமும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் ஏற்படும் அதன்பிறகு, அவர்கள் எந்த விளையாட்டில் திறமை பெற்றிருக்கின்றனர் என்பதை அடையாளம் கண்டு, அந்த விளையாட்டில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் எண்ணம் அறிந்து, பயிற்சி வழங்கும் போது, அவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று விளையாடுகின்றனர். மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் கூட பங்கேற்கின்றனர். வாய்ப்பு பிரகாசமாகும்! இந்து, விஜயபானு, இயக்குனர்கள் துவாரகா சிறப்பு பள்ளி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற போட்டிகளுக்கு அழைத்து வருகிறோம். விளையாட தெரியாத, நன்கு விளையாட தெரிந்த என அனைவரையும் பங்கேற்க செய்கிறோம். அதில் ஒருவர் வெற்றி பெறும் போது, மற்றவர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. வரிசையில் நின்று உணவருந்த செல்வது, கழிப்பறை செல்வது என, அவர்களது வேலையை அவர்களே செய்து கொள்கின்றனர்; இதுவே, அவர்களை பொறுத்தவரை பெரிய மாற்றம் தான். மாணவ, மாணவியரை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல பெற்றோரும் ஊக்குவிக்கின்றனர்; சில பெற்றோர் நேரடியாக வந்து ஊக்குவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை