உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் முற்றுகை; காலி பாட்டில் நடைமுறைக்கு எதிர்ப்பு

 டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் முற்றுகை; காலி பாட்டில் நடைமுறைக்கு எதிர்ப்பு

அனுப்பர்பாளையம் : காலி மது பாட்டில் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தை மதுக்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். காலி மது பாட்டில்கள் பெறும் நடைமுறை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த மாதம் 27 முதல் அமலாகியுள்ளது. மாவட்டத்தில் பணிபுரியும் டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் 300க்கும் மேற்பட்டோர், நேற்று காலை டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஸ்டிக்கரை (காலி பாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரை ஒப்படைத்தால் 10 ரூபாய் திருப்பி வழங்கப்படுகிறது) திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: ஸ்டிக்கரை பாட்டில் ஒட்டி அதனை ஸ்கேன் செய்வதில் அதிக நேரம் ஆகிறது. விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு, வாடிக்கையாளர் கோபத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. கடையில் போதிய ஆட்கள் இல்லை. பாட்டிலை திரும்ப பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வாங்கும் பாட்டிலை சேமித்து வைக்கவும் கடையில் இடவசதி கிடையாது. வேலை பளு அதிகமாவதுடன் நேரமும் விரயமாகிறது. மாவட்ட நிர்வாகம் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டவும், அதனை திரும்ப பெருவதற்கும் தனி நபரை நியமித்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். மாவட்ட மேலாளர் ராஜகோபால், பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களில் தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி கூறினார். மது பாட்டில்களால் மாலை அணிந்தவர் வெளியேற்றம் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் மது பாட்டிலை கழுத்தில் மாலையாக அணிந்து கட்சியினருடன் வந்தார். போலீசார் கட்சியினரை டாஸ்மாக் மாவட்ட அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ