| ADDED : பிப் 23, 2024 12:07 AM
திருப்பூர்;மாநகராட்சி பகுதியில், காலியிடத்துக்கு வரி விதிப்பு செய்ய 20 ஆயிரம் ரூபாய் கேட்டதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். அவரது மனைவி கலாமணி பெயரில், விசாலாட்சி நகரில் 3.5 சென்ட் இடத்தை, 2 ஆண்டுகள் முன் வாங்கினார். தற்போது அங்கு வீடு கட்ட திட்டமிட்டு, காலியிடத்துக்கு வரி விதிப்பு செய்ய கடந்த 12ம் தேதி மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார்.விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு, ஆய்வு செய்த மாநகராட்சி ஊழியர்கள், காலியிட வரி 6 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டு, இழுத்தடிப்பதாக சொக்கலிங்கம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மாநகராட்சி குறை கேட்பு பிரிவுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஆதாரத்துடன் புகார் தந்தால் நடவடிக்கை
மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் வினோத் கூறியதாவது:புகார் குறித்து உரிய ஊழியரிடம் விசாரித்த போது, அவர் அது போல் எதுவும் கேட்கவில்லை எனத் தெரிவித்தார். மனுதாரர் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. உடனடியாக அதன் மீது உரிய உத்தரவு பிறப்பித்து காலியிட வரி விதிப்பு செய்யப்படும்.தற்போது வருவாய் பிரிவினர் நிலுவை வரி வசூலில் மும்முரமாக உள்ளதால், புதிய மனுக்கள் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர் பணம் கேட்டதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.