திருச்செந்துார் அரசு பஸ்சில் பயங்கர தீ
திருப்பூர்:திருப்பூரில் இருந்து தாராபுரம் வழியாக திருச்செந்துாருக்கு அரசு பஸ் 52 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு புறப்பட்டது. தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் கடந்து, அலங்கியம் பிரிவில் சென்றபோது, பஸ்சில் இருந்து புகை வந்தது. இதை கவனித்த டிரைவர் கணேசமூர்த்தி, பஸ்சை ஓரமாக நிறுத்தி, பயணியரை உடனே இறங்குமாறு சத்தம் போட்டார்.சூழ்நிலையை புரிந்து கொண்ட பயணியர், உடனே இறங்கினர். அதேநேரம், பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மளமளவென பரவிய தீயால், பஸ்சின் முன்புறம் முழுமையாக எரிந்து சேதமானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், பயணியர் வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.டிரைவர் கணேசமூர்த்தி கூறியதாவது:இரவு 10:30 மணிக்கு, 'கியர் ராடு' பீஸ் கேரியரில் புகை வாடை வந்தது. பஸ்சை ஓரங்கட்டி நிறுத்திப் பார்த்ததில், ஒயரில் தீப்பற்றி புகை வந்தது. உடனே 'பேட்டரியை ஆப்' செய்து, பஸ்சை விட்டு பயணியரை இறக்கினேன்.இவ்வாறு அவர் கூறினார்.விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து, தாராபுரம் கிளை மேலாளர் கணேசன் கூறியதாவது:மின்கசிவு ஏற்பட்டு புகை வந்துள்ளது. ஒயரில் தீப்பிடித்ததைக் கவனித்த டிரைவர், சரியான நேரத்தில் செயல்பட்டு, நடத்துனர் உதவியுடன் பயணியரை வெளியேற்றியுள்ளார். பி.எஸ்., - 6 ரக பஸ் கதவுகள் 'ஏர்லாக்' ஆகி இருந்தால், திறக்க முடியாமல் போயிருக்கும்.ஆனால், சூழலை புரிந்து கொண்ட டிரைவர் கணேசமூர்த்தி, சட்டென பேட்டரியை அணைத்து, கதவுகளை திறந்து விட்டார். இதனால், பயணியர் வெளியேற முடிந்தது. பயணியர் காப்பாற்றப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.