நமது வினைகளை போக்கவே எம்பெருமான் திருநீறு அணிகிறார்
திருப்பூர்: கொங்கு மண்டல ஆடல்வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட் சார்பில், திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு ஹார்வி குமார சாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், சிவசண்முகம் பேசியதாவது: மாணிக்கவாசகர், திருவாசகத்தை இயற்றினார். அதன்பின், சுவாமி அவரோடு அழைத்து வந்திருந்த 999 சிவகணங்களுடன் கைலாயம் சென்றனர். மாணிக்கவாசகர் மட்டும், சுவாமியின் வழிகாட்டுதல்படி உத்தரகோச மங்கை, திருவாரூர், திருவிடை மருதுார், திருவாவடுதுறை, திருக்கழுக்குன்றம், திரு அண்ணாமலை தலங்களுக்கெல்லாம் சென்று வழிபாடு செய்தார். தில்லைக்கு வந்து சில பதிகங்கள் பாடி, தங்கியிருந்தார். தில்லைவாழ் அந்தணர்களெல்லாம் மாணிக்கவாசகரை சந்தித்தனர். நம்மைப்போலவே சுவாமியும் திருநீறு அணிந்திருக்கிறார். நமது வினைகள், அழுக்குகளெல்லாம் நீங்குவதற்காகவே, தனது உடலில் திருநீறு அணிந்திருக்கிறார் என்கிற செய்தியை மாணிக்கவாசகர் சொல்கிறார். அர்த்தநாரீஸ்வரர் கோலமாக இருப்பதுவும், இந்த உயிர்களெல்லாம் போகத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே சுவாமி எப்போதும் அம்மையுடன் இணைந்து இருக்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.