மேலும் செய்திகள்
இடியும் நிலையில் இ சேவை மையம்
26-Oct-2025
பல்லடம்: பருவாய் கிராமத்தில் கட்டப்பட்ட பல் நோக்கு மைய கட்டடம், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே பாழாகி வருகிறது. கிராம ஊராட்சி பகுதிகளில் நுாலகம், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக கட்டடம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, பல் நோக்கு மைய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கிராமங்களின் தேவை அறிந்து இவற்றைக் கட்டினால், அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முறையாக சென்று சேரும். ஆனால், தேவை உள்ளதா, இல்லையா என்பதே தெரியாமல் கட்டப்படும் பல கட்டடங்கள், மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாக்கி வருகிறது. பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சிக்கு உட் பட்ட பகுதியில் கட்டப்பட்ட பல் நோக்கு மைய கட்டடம் ஒன்று, பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே பல் இளித்து வருகிறது. அங்குள்ள வி.ஐ.பி., கார்டன் பகுதியில், முன்னாள் எம்.பி., நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2022--23ம் ஆண்டு, 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. படிக்கட்டு, சுற்றுச்சாவர், அடித்தளம், ஆகியவற்றில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பல அரசு கட்டடங்கள், இன்றும் உறுதித் தன்மையுடன் நிலைத்திருக்க, இரண்டே ஆண்டில், விரிசல் விடும் அளவுக்கு தான் இன்றைய கட்டடங்களின் ஸ்திரத்தன்மை உள்ளன. அதிலும், பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இந்த நிலை என்றால், எதிர்காலத்தில் என்னவாகும் என்று தெரியவில்லை. பொதுமக்களின் தேவை அறிந்து, கட்டடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.
26-Oct-2025