| ADDED : பிப் 03, 2024 11:45 PM
திருப்பூர்:''திருப்பூர் டவுன் ஹால் வளாகத்துக்கு, எஸ்.ரங்கசாமி செட்டியார் பெயர் சூட்ட வேண்டும்'' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள டவுன்ஹால் வளாகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பன்நோக்கு மாநாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. பெருமளவு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இவ்வளாகம் திறப்பு விழா நடத்தப்படவுள்ளது.இந்த வளாகத்துக்கு, அந்த இடத்தை தானமாக வழங்கிய எஸ்.ரங்கசாமி செட்டியார் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையிலும், ம.தி.மு.க., கவுன்சிலர்கள் அக்குழு தலைவர் நாகராஜ் தலைமையிலும், மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.மனுவில், ''திருப்பூர் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் அமைந்துள்ள இடத்தை வழங்கிய எஸ்.ரங்கசாமி செட்டியார் பெயரில் தான் இது வரை டவுன்ஹால் வளாகம் செயல்பட்டு வந்தது. இன்றைய சந்தை நிலவரத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை வழங்கிய அவரது பெயரையே புதிய வளாகத்துக்கும் சூட்ட வேண்டும். அவரது குடும்பத்தார் மற்றும் அவரது சமூக மக்களும், பொதுமக்களும் இதன் மூலம் மன நிறைவு பெறுவர்'' என்று கூறியுள்ளனர்.