உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரைமட்ட பாலங்களுக்கு மேற்கூரை திட்டத்தை விரிவுபடுத்தணும்

தரைமட்ட பாலங்களுக்கு மேற்கூரை திட்டத்தை விரிவுபடுத்தணும்

உடுமலை; ரயில்வே தரை மட்ட பாலங்களில், மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பதை தவிர்க்க, அனைத்து பாலங்களிலும், மேற்கூரை அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை பகுதியில், பல்வேறு கிராம இணைப்பு ரோடுகள் குறுக்கிடுகின்றன. அகல ரயில்பாதை பணிகளின் போது, இந்த இணைப்பு ரோடு வழியாக செல்ல தரைமட்ட பாலங்கள் ரயில்வே சார்பில் கட்டப்பட்டன. இப்பாலங்களில், மழை நீர் வெளியேற போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கி கிராம இணைப்பு ரோடுகளில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. பாலப்பம்பட்டி, ராகல்பாவி உள்ளிட்ட கிராம இணைப்பு ரோடுகள், உடுமலை நகரிலுள்ள பெரியார் நகர் பாலம் உள்ளிட்ட பாலங்களில், ஒவ்வொரு மழைக்காலத்திலும், போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது. முன்பு ரயில்வே நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பாலத்தில் தேங்கும் தண்ணீரை மோட்டார் வாயிலாக வெளியேற்றி வந்தனர். இந்த பணியும் நடைமுறை சிக்கல்களால், பின்பற்றப்படுவதில்லை. மழைக்காலங்களில் இணைப்பு ரோடுகளை தவிர்த்து நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை வாகன ஓட்டுநர்களுக்கு உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, ரயில்வே தரப்பில், தரைமட்ட பாலத்தின் இருபுறங்களிலும், மேற்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக, அந்தியூர் - பாப்பனுாத்து இணைப்பு ரோடு உள்ளிட்ட சில தரைமட்ட பாலங்களில், இந்த கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாலத்தினுள் மழை நீர் செல்லாது. இத்திட்டத்தை அனைத்து பாலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் கூறியதாவது: மழைக்காலங்களில் தரை மட்ட பாலங்களில், எத்தனை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது என தெரிவதில்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பாலம் வழியாக சென்று விபத்துக்குள்ளாகின்றனர். உடுமலை பகுதியிலுள்ள அனைத்து பாலங்களிலும், மேற்கூரை அமைக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். பெரியார் நகர் பாலத்தில் கழிவு நீர் தேங்கும் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை