உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடல் கடந்து வீசும் மறையூர் சந்தன வாசம்; மொரீசியஸ் நாட்டிற்கு 1000 கிலோ விதைகள் பயணம்

கடல் கடந்து வீசும் மறையூர் சந்தன வாசம்; மொரீசியஸ் நாட்டிற்கு 1000 கிலோ விதைகள் பயணம்

உடுமலை; மறையூரிலிருந்து, ஆயிரம் கிலோ சந்தன மரத்தின் விதை, கடல் கடந்து மொரீசியஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சந்தனக்காடு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உடுமலை அருகே, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூரில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இயற்கையாக இங்கு விளையும் சந்தனத்திற்கு என உலக அளவில் தனி 'மவுசு' உள்ள நிலையில், 1980 களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. முதிர்ந்த மரங்கள், திருட்டு உள்ளிட்ட காரணங்களினால், தற்போது, 60 ஆயிரம் மரங்கள் உள்ளன. சந்தன மரங்கள் விற்பனை வாயிலாக, அரசுக்கு ஆண்டுக்கு, ரூ.80 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது, சந்தன மரங்களின் பரப்பை அதிகரிக்க, கேரளா வனத்துறை, மூன்று இடங்களில் நாற்றுப்பண்ணைகள் அமைத்து, 10 ஆயிரம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்துள்ளதோடு, நடவு செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இங்கு விளையும் சந்தனம்குறித்து அறித்த, மொரீசியஸ் நாட்டில் இயங்கி வரும், நறுமண எண்ணெய்கள் உற்பத்தி நிறுவனத்தினர் மறையூருக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மறையூர் வனத்துறை சந்தன கோட்டம் வனப்பாதுகாவலர் வினோத்குமாரிடம், சந்தன மரங்கள் சிறப்பு, ஆயில் உற்பத்தி பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர். பல மாதங்கள், மறையூர் மற்றும் மொரீசியஸ் நாட்டில் நிலவும் சீதோஷ்ண நிலை,மண் வளம் குறித்து ஆய்வு செய்து, இரு பகுதிகளிலும் ஒரே மாதியான கால நிலை, மண் வளம் உள்ளதை அறிந்து, மீண்டும் மறையூருக்கு வந்து, ஆயிரம் கிலோ சந்தன மரங்களின் விதைகளை, கிலோ, 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி சென்றுள்ளனர். மேலும், மறையூர் சந்தன கிடங்கில், சந்தன மரக்கன்று உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் என்பவரையும் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு சென்று, முதற்கட்டமாக, ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் நடவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளா வனத்துறை யினர் கூறுகையில், 'மறையூர் சந்தனத்திற்கு என சிறப்பு உள்ள நிலையில், மொரீசியஸ் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம், ஆய்வு செய்து, இங்கிருந்து ஆயிரம் கிலோ சந்தன விதைகளை வாங்கி சென்று, அங்கு நடவு செய்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை