சாக்கடை பராமரிப்பு இயந்திரம் சேதமடைந்து வரும் அவலம்
திருப்பூர்; பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்கு பயன்படுத்திய வாகனம் வீணாக கிடக்கிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு, பிரதான குழாய்கள் வாயிலாக கழிவு நீர் சேகரிக்கப்படுகிறது. இந்த கழிவு நீர் உந்து விசை மூலம் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடப்படுகிறது. இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யும் பணிக்காக, இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.அவ்வகையில், இப்பணிக்கு பயன்படுத்திய இயந்திரம் பொருத்திய வாகனம் வீணாக கிடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள டி.எஸ்.கே., மருத்துவமனை வளாகத்தில் இந்த வாகனம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும் செடிகள் மண்டிக் காணப்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இயந்திரம் பொருத்திய வாகனம் காலாவதியாகி விட்டது. இதை 'கண்டம்' என்று சான்று பெற்று, ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றனர்.