கிடப்பில் போடப்பட்ட புறக்காவல் நிலையம் திட்டம்
உடுமலை; பெதப்பம்பட்டியில், புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதை நிறைவேற்ற, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கோவை மாவட்டம் நெகமம் மற்றும் கோமங்கலம் போலீசிலிருந்து, 30 கிராமங்கள் பிரிக்கப்பட்டு, சேர்க்கப்பட்டதால், கட்டுப்பாட்டு பகுதி, 83 கிராமங்களாக அதிகரித்தது.பொள்ளாச்சி, பல்லடம், மடத்துக்குளம், தாராபுரம் தாலுகா எல்லைகளை ஓட்டி, பரந்து விரிந்த பரப்பில், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டு கிராமங்கள் அமைந்துள்ளன.குடிமங்கலம் போலீசில், புதிதாக கிராமங்கள் சேர்க்கப்பட்டதும், நிர்வாக ரீதியாக பெதப்பம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி நால்ரோட்டில் புறக்காவல் நிலையம் அமைப்பதால், கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்துவதுடன், சுற்றுப்பகுதி கிராமங்களில், குற்றத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் எளிதாக இருக்கும் என போலீஸ் தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.புறக்காவல் நிலையத்திற்கு, பெதப்பம்பட்டி நால்ரோட்டில், முன்னர் பஸ் ஸ்டாப் நிழற்குடை இருந்த இடத்தில், இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அங்கு புறக்காவல் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை.மாலை நேரங்களில், நால்ரோடு பகுதியில், 'குடி'மகன்களின் அட்டகாசத்தால், அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்களும், பெண்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.