உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் ஆன்லைனில் வந்தாச்சு! பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும்

வாக்காளர் பட்டியல் திருத்த படிவம் ஆன்லைனில் வந்தாச்சு! பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும்

திருப்பூர்: வாக்காளர்கள் மிக சுலபமாக, ஆன்லைனிலேயே தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதியை, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் சேர்த்துள்ளது. தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், கடந்த 4 ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று, தீவிர திருத்த படிவங்களை வழங்கிவருகின்றனர். வாக்காளர்கள் எங்கிருந்தாலும், இருப்பிடத்திலேயே மிக சுலபமாக, ஆன்லைனில் தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்யும் வசதியையும் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்கு, https://voters.eci.gov.in/login என்கிற தேர்தல் கமிஷனின் முகவரியில் சென்று, பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணை கொடுக்கவேண்டும். ஒ.டி.பி., பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம் - 2026 என்கிற பிரிவில், Fill Enumeration Form ஐ கிளிக் செய்து, நுழைய வேண்டும். கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது, ஆன்லைன் தீவிர திருத்த படிவம் தயாராக இருக்கும். அதில், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், 2002 தீவிர பட்டியலில் பெயர் இருப்பின் அவ்விவரங்கள், கணவன் அல்லது மனைவியின் பெயர் மற்றும் கைவசம் இருப்பின் அவர்களின் அடையாள அட்டை எண் விவரங்களை பதிவு செய்யவேண்டும். வாக்காளரின் புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, 'சப்மிட்' கொடுக்க வேண்டும். அடுத்ததாக, 'இ- கையெழுத்து' பிரிவுக்குள் செல்லும். அங்கு, ஆதார் எண் பதிவு செய்து, ஒ.டி.பி.,ஐ உள்ளிட்டால்போதும். ஆதாரில் உள்ள வாக்காளரின் விவரங்களும், வாக்காளர் அட்டை விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, தீவிர திருத்த படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும். உடனடியாக, வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, மெசேஜ் அனுப்பப்படும். ஆன்லைனில் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். வாக்காளர் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், 2002 தீவிர திருத்த பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர் அல்லது பெற்றோரின் விவரங்கள், வாக்காளரின் புகைப்படம், ஆதார் எண் ஆகியவற்றை தயாராக வைத்திருந்தால், 7 நிமிடத்துக்குள், தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்துவிடலாம். குறிப்பிட்ட வாக்காளரின் தீவிர திருத்த படிவம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டதற்கான விவரங்கள், அந்தந்த பி.எல்.ஓ.,க்களுக்கு, பி.எல்.ஓ., ஆப்-ல் காட்டப்படும். பி.எல்.ஓ., மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர் ஒப்புதல் அளித்து, நேரடியாக வரைவு பட்டியலில் சேர்க்கப்படும்.

மேம்பாடு அவசியம்

கடந்த, 2002ம் ஆண்டு தீவிர திருத்த பட்டியலில் பெயர் தேடுதல், தங்கள் பி.எல்.ஓ., யார் என்கிற விவரங்களை கண்டறிதல், தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வது என தீவிர திருத்தம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்காக, ஒரே நேரத்தில் ஏராளமானோர் தேர்தல் கமிஷன் இணையதளத்தை அணுகுகின்றனர். இதனால், தேர்தல் கமிஷனின் இணையதள வேகம் அடிக்கடி மந்தமாகிவிடுகிறது. தீவிர திருத்தம் நடைபெற்றுவரும் நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் அணுகினாலும், இணையதள வேகம் குறையாதவாறு, தேவையான மேம்பாடுகளை தேர்தல் கமிஷஷன் மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சங்கர்
நவ 12, 2025 17:51

உபயோகம் இல்லாத முயற்சி. பெயரில் சிறு மாற்றம், உதாரணமாக, ஆதார் அட்டையில் பெயர், இனிஷியலுடனிருந்து, ஓட்டர் அட்டையில் பெயர் இனிஷியல் இல்லாமல் இருந்தால், மற்றும் இரட்டைப் பெயர்கள் ஒன்றில் சேர்ந்தும், மற்றதில் பிரித்தும் போடப்பட்டிருந்தாலும் நிராகரிக்கப்பட்டு விடும்


A P
நவ 12, 2025 22:08

பல வருடங்களாகப் போராடியும் இன்னும் எங்கள் குடும்பத்தினருக்கு வோட்டர் கார்டு கிடைக்கவே இல்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.


Gibron Hasan
நவ 12, 2025 22:22

சரியாக சொன்னீர்கள் நேர விரையம் தான்.


Mennon Kasirajam
நவ 12, 2025 07:52

Very Good Information.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை