கடன் பெற்றதும், சுருட்டப்பட்டதும் சம்பளம் கழிந்தபோதுதான் தெரிந்தது; மாநகராட்சி குடிநீர் பணியாளரை லாவகமாக ஏமாற்றிய பெண்
திருப்பூர் : மாநகராட்சி குடிநீர் பணியாளர் பெயரில் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று, அதை 'சுருட்டிய' பெண் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.திருப்பூர், பி.என்.ரோடு, போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், 50. மாநகராட்சி குடிநீர் பணியாளர்.சில மாதங்கள் முன் தன் மகள் திருமணத்துக்கு கடன் பெற சிலரை அணுகியுள்ளார். பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார். கடன் பெற்றுத்தருவதாக கூறிய அவரை நம்பி, ஆவணங்கள் மற்றும் மொபைல் போனையும் காளியப்பன் அளித்துள்ளார்.அவற்றைக் கொண்டு மூன்று தனியார் நிதி நிறுவனங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் கடனுக்கு விண்ணப்பித்து, 4.60 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.அந்தப் பணத்தை உடனடியாக தனது வங்கி கணக்குகளுக்கு அந்தப் பெண் மாற்றம் செய்து விட்டார். இந்த விவரம் எதுவும் காளியப்பனுக்குத் தெரியவில்லை.அவரது மொபைல் போன் வாயிலாக இந்த பரிவர்த்தனைகளை செய்த பெண், அந்த பதிவுகள் அனைத்தையும் அழித்து விட்டார்.கடன் தொகைக்காக மீண்டும் காளியப்பன் அணுகிய போது ஏதோ காரணங்களைக் கூறி கடன் கிடைக்க வில்லை என்று கூறியுள்ளார். தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, மகள் திருமணத்தை முடித்தார்.வங்கி கணக்கில் அவரது சம்பளம் வரவு வைத்தவுடன் கடன் தவணைக்கு சென்று விட்டது. மேலும் இரு நிறுவன ஊழியர்கள் தவணை தொகை கேட்டு அணுகிய போது தான் அவர் பெயரில் கடன் பெற்றவிவரம் தெரிய வந்தது.வங்கி வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது, நிதி நிறுவனங்கள் கடன் வழங்கியதும், அந்தப் பெண்ணின் கணக்குக்கு அவை மாற்றப்பட்ட விவரமும் அனைத்தும் தெரிய வந்தது.காளியப்பன் இது குறித்து சென்று கேட்ட போது, அந்தப்பெண் உரிய பதில் தரவில்லை.இதையடுத்து காளியப்பன் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.அவரது உத்தரவின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் புகாரைப் பெற்று விசாரிக்கின்றனர். இந்தப் பெண் இதே பாணியில் வேறு சிலரையும் ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.