- நிருபர் குழு -உடுமலை, பொள்ளாச்சியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில், திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து, திருக்குறள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் ராஜசுந்தரம் தலைமை வகித்தார்.உடுமலை மக்கள் பேரவையின் தலைவர் முத்துக்குமாரசாமி, திருக்குறள் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.தொல்லியல் துறை ஓய்வு பெற்ற ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி பேசுகையில்,'' உலகின் பல்வேறு நாடுகள், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றினேன். அதற்கு, தாய்மொழியான தமிழும், தமிழ் இலக்கியமும் வரலாறுகளுமே காரணம். தென்கொங்கில் இருக்கும் ஏராளமான கல்வெட்டுகள் குறித்து தொடர்ந்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தப்படும்,'' என்றார்.பெரிய கோட்டை ஊராட்சித்தலைவர் பேச்சியம்மாள், முன்னாள் தலைவர்கள் பாலசுப்பிரமணியம், முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாகமாணிக்கம், துணைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் லிங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருவள்ளுவர் திருக்கோட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், மரபுக்கவிஞர் குமாரராஜா , முனைவர் மூர்த்தீஸ்வரி ஆகியோருக்கு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கப்பட்டது.மானுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது; ஆசிரியர் ஹேனா ஷெர்லி பெற்றுக்கொண்டார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவக்குமார். அருள்செல்வன், பால்கென்னடி, விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், அய்யலு மீனாட்சி நகர் பகுதியில் நூலகம் அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தில், திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மைய நிறுவனர் அம்சபிரியா பேசினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி மாணவியர் பிரவீனா, ஹஸ்வினி ஆகியோரின் ஓவியக்கண்காட்சி நடந்தது. கண்காட்சியை ஓவியர் அறவொளி துவக்கி வைத்தார்.திருவள்ளுவர் படத்தை, கவிஞர்கள் கீதா, ஜெயலட்சுமி திறந்து வைத்தனர். விருதுகள் வழங்கல்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கலை, இலக்கியம், சிறார் மேம்பாடு, பசுமை இயக்கப்பணிகள் சிறப்பாகச் செயல்பட்ட சுப்ரமணியம், வீராசாமி, பாலமுருகன், ஞானசேகரன், கீதா ஆகியோருக்கு அறிவுச்சோலை ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டது. கவிஞர் ரமேஷ்குமார், விருதுகளை வழங்கினார். 1,300 திருக்குறள் எழுதிய மாணவர்களுக்கு திருக்குறள் விருது வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சுமதி, விருதுகளை வழங்கினார். மேலும், ஊக்கப்படுத்தும் விதமாக திருக்குறள் முயற்சியாளர் விருது வழங்கப்பட்டது.திருக்குறள் சிறப்பு குறித்து கவிஞர் செந்தில்குமார், ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, ஓவியம், கட்டுரைகள் எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பெத்தநாயக்கனுார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து இருந்தனர்.கவிஞர் காளிமுத்து நன்றி கூறினார்.